காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் வடமாகாண முதல்வரை சந்தித்தனர்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் வடமாகாண முதல்வரை சந்தித்தனர்

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 9:56 pm

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்தனர்.

யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் து.ரவிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலையடுத்து, வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]ஐ.நா வினால் இரண்டு வருட காலக்கெடு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் என்ன முன்னேற்றம் காணப்படுகின்றது என்பது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும். சில இடங்களில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன. ஜோசப் முகாமில் தமது பிள்ளைகள் உள்ளதாக பெற்றோர் நம்புகின்றனர். அங்கு எவரெவர் உள்ளார்கள் என்பதை அடையாளப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரவுள்ளோம்.[/quote]

என குறிப்பிட்டார்.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் 37 ஆவது நாளாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

33 ஆவது நாளாக வவுனியா மத்திய தபால் நிலைய முன்றலில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் 22 ஆவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மருதங்கேணி பிரதேச செயலக முன்றலிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24 ஆவது நாளாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக முன்றலில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்