ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கோட்டாபய

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கோட்டாபய

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கோட்டாபய

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 8:04 pm

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று தமது தலைமையில் செயற்பட்டதாக அமைச்சர் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

அவ்வாறானதொரு குழு இருந்திருந்தால் அதன் பொறுப்பை அப்போதைய இராணுவத் தளபதியே ஏற்க வேண்டும் என இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்க உறுப்பினர்களை கொழும்பில் நேற்று (27) மாலை சந்தித்த சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இலங்கையில் சர்வதேச செய்தியாளர்களிடம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கள் சில சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஊடகவியலாளர்களைக் கொலை செய்தமை மற்றும் கடத்தல் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், தற்போது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள், அப்போதைய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளினூடாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதாக கோட்டாபய தெரிவித்துள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்து வெளியிட்டுள்ளது.

செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானமொன்றை எடுக்கவில்லை எனவும், தமது கொள்கைகளுக்கு அமைய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனின் அவருக்கு அழைப்பு விடுக்கத் தயார் எனவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமக்கு அரசியல் புரியாது என முன்னாள் ஜனாதிபதி எப்போதும் கூறுவார் எனவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் இந்த சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஸ கருத்து தெரிவித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் செயற்பட்ட காலப்பகுதியில், இலங்கை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சியமைத்ததன் பின்னர் நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இலங்கையில் சீனா மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக திட்டத்தை இரத்து செய்யுமாறு இரண்டு தடவைகள் தோவால் அறிவித்ததாகவும், கொழும்பு தெற்கு துறைமுக நுழைவாயிலை சீனாவிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ளுமாறு அவர் கூறியதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்புலத்தில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, இந்தியா மேலும் சஞ்சலமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த நீ்ர்மூழ்கிக் கப்பல் அணுவாயுதக் கப்பல் அல்லவெனவும் கப்பல் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானதொரு கொள்கையைப் பின்பற்றிய இந்தியா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதத்தை 99 வருட குத்தகையில் சீனாவிற்கு வழங்குவதற்கான ஆயத்தங்கள் தொடர்பில் மௌனம் சாதித்ததாகவும் நேற்றைய சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்