விளாடிமிர் புட்டினை சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன: நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

விளாடிமிர் புட்டினை சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன: நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 8:13 pm

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்புறவு ஆரம்பித்து 60 வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமூக மாற்றத்திற்கு முன் மாதிரியாகப் பாரிய அர்ப்பணிப்பு செய்த தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது நாட்டிற்கு விஜயம் செய்ய வேண்டுமென இந்தியாவில் நடைபெற்ற கோவா மாநாட்டின்போது ரஷ்ய ஜனாதிபதியால் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.

இருநாட்டு பொருளாதார வர்த்தக மற்றும் அரசியல் உறவினை வலுப்படுத்தி, முன்னோக்கிச் செல்வதற்கான உதவிகளை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

உலகில் பலம்வாய்ந்த தலைவருடனான இந்த நட்புறவு தொடர்பில் தாம் பெருமையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியால் நான்காம் நூற்றாண்டுக்கு சொந்தமான கண்டி இராச்சியத்தின் வாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டது.

இது 1906 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த போது ரஷ்யாவினால் கொள்வனவு செய்யப்பட்டது.

இலங்கை – ரஷ்ய உறவின் 60 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நேற்றைய தினம் (23) நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் ரஷ்யாவினை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் இகோர் மொகியுலோச் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் விசேட பிரதிநிதியாக விண்வெளியில் முதலில் கால்பதித்த பெண்ணான வலன்ரினா டெரஸ்கோவா மற்றும் விண்வெளி வீரரான விட்மிர் லெனாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்விடேவ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான உத்தியாகப்பூர்வ சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றது.

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மீன்பிடி, தொழில்நுட்ப, கலாசார மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான நான்கு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவிலுள்ள இலங்கையர்களை இன்று பிற்பகல் சந்தித்தார்.

இலங்கை ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்திற்கு அந்நாட்டு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் உத்தியோகப்பூர்வ அழைப்பிற்கமைய, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 43 வருடங்களுக்கு முன்னர் அங்கு விஜயம் செய்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

 

17309501_10154950783451327_3517453212540547072_n 17425022_10154952861116327_5996988977596672399_n

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்