கல்குடா மதுபானசாலையின் நிர்மாணப்பணிகளை இடைநிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெறுமாறு நசீர் பணிப்புரை

கல்குடா மதுபானசாலையின் நிர்மாணப்பணிகளை இடைநிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெறுமாறு நசீர் பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 8:47 pm

மட்டக்களப்பு – கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படும் மதுபான தொழிற்சாலையின் பணிகளை இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பி வைத்ததுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் சூழ்நிலையின் கீழும் மீண்டும் இந்த மதுபான தொழிற்சாலை நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில், நீதிமன்ற தடையுத்தரவைப் பெறுமாறு வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் மது பாவனையை நிறுத்துவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண முதலமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் கலாசாரம் மீண்டும் நாட்டுக்குள் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது எனவும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பில் நியாயமான விசாரணை இடம்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்