ஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது: வைகோ

ஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது: வைகோ

ஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது: வைகோ

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 7:47 pm

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 34 ஆம் இலக்க தீர்மானத்தினூடாக ஈழத்தமிழருக்கான நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனிய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் வைகோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 75 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஹிட்லரின் தலைமையில் நாசிகள் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் நூரம்பர்கில் நீதி விசாரணை நடைபெற்று, இனப்படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், 50 களில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 60 ஆண்டுகள் இலங்கை அரசாங்கம், ஈழத் தமிழ் இனத்தை நசுக்கி, நாலாந்தர குடிமக்களாக்கியதுடன் அறவழியில் உரிமையையும், நீதியையும் கேட்ட ஈழத் தமிழர்கள் மீது, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அடக்கு முறையைப் பயன்படுத்தியதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், வழிப்பாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள், தமிழ் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், உலகத் தமிழர் மாநாட்டில் தமிழர் படுகொலை, யாழ். நூலகம் எரிப்பு, விசாரணையின்றி சிறையில் சித்திரவதை மற்றும் கணக்கற்ற படுகொலைகள் என கோரத் தாண்டவம் ஆடியதால் தமிழர் தந்தை செல்வா தலைமையில் இறையாண்மையுள்ள ஈழ அரசே இலக்கு என 1976 மே 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதே வட்டுக்கோட்டை தீர்மானம் எனவும் வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசாங்கத்திற்கு முப்படை உதவிகளையும் தந்து யுத்தத்தை பின்னின்று இயக்கியதாலும், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராணுவ உதவியாலும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2009 மே 18 வரையில் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தி ஆயுதம் ஏந்தாத தமிழர்களையும், பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை ஈவு இரக்கமின்றி ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டதாகவும் வைகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் மூவர் அடங்கிய குழு அறிக்கை, சாட்சியங்களோடு தமிழ் இனப்படுகொலையை நிரூபித்ததாகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் காய்வதற்கு முன்னரே ஐ.நா. மனித உரிமைப் பேரவை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதாகவும் வைகோ கவலை தெரிவித்துள்ளார்.

எனினும், இம்முறை கானா, பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரோமானிய ஒப்பந்த சட்டத்தில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் என எஸ்டோனியா வலியுறுத்தியதாகவும் அவ்வாறு கையெழுத்திடும் பட்சத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பிரச்சினையைக் கொண்டு செல்ல முடியும் எனவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்