மதுபான உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க வரவு செலவுத் திட்டத்தில் வரிச்சலுகை வழங்கப்படவில்லை

மதுபான உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க வரவு செலவுத் திட்டத்தில் வரிச்சலுகை வழங்கப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 9:22 pm

கிழக்கு மாகாணத்தில் மது உற்பத்தி தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக, வரவு செலவுத் திட்டத்தில் வரிச்சலுகை வழங்கப்படவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் அமைச்சர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டார்.

இதன்போது, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவுமே, வரவு செலவுத் திட்டத்தில் வரிச்சலுகை வழங்கப்பட்டதாகவும் இதனைக்கொண்டு மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தாம் அதனை வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள், மதுபானம், சிகரட் பயன்பாட்டிலிருந்து நாட்டை விடுவிப்பதாக தேர்தல் பிரகடனத்தை வெளியிட்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில், கல்குடா பகுதியில் 19 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் W.M.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.

மென்டிஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கமைய, அதன் தலைமைப்பதவியை அர்ஜூன் அலோசியஸ் வகிக்கின்றார்.

பேர்ப்பச்சுவல் வர்த்தகக் குழுமத்திற்கு சொந்தமான மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம், 469 மில்லியன் ரூபா வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக கலால் ஆணையாளர் அண்மையில் நியூஸ்பெஸ்ட்டுக்குக் கூறினார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனான அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம் முறிகள் விநியோக மோசடியுடன் தொடர்புபட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்