ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 8:05 pm

மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நேற்று (21) முற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் சுதந்திர ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோரே தாக்கப்பட்டிருந்தனர்.

தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிச்சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

ஊடகவியலாளர்களைத் தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த சந்தேகநபர்கள் கல்குடா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் இருவரும் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு செய்தனர்.

ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூஸ்பெஸ்ட்டின் உயர்மட்டக் குழுவினர் பொலிஸ் தலைமையகத்தில் இன்று எழுத்து மூல முறைப்பாட்டினை சமர்ப்பித்தனர்.

இதேவேளை, இந்த தாக்குதல் முயற்சியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிரான மது உற்பத்தி நிறுவனங்களின் செயற்பாடுகள் மட்டக்களப்பில் தொடர்வதாகவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் எனவும் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற மனநிலை நல்லாட்சியிலும் தொடர்வதாக சுட்டிக்காட்டும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், உண்மைகள் வெளிவருவதைத் தடுக்கும் அதிகார வர்க்கத்தின் முயற்சியையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுத்தவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத்தவறினால் ஊடகவியலாளர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்