ஐ.நா. வில் இலங்கை தொடர்பிலான பிரேரணை குறித்து விவாதம்: நாளை வாக்கெடுப்பு

ஐ.நா. வில் இலங்கை தொடர்பிலான பிரேரணை குறித்து விவாதம்: நாளை வாக்கெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 8:12 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பிலான பிரேரணை குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவா நகரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய பிரேரணையின் வரைபு ஏற்கனவே வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவது குறித்து இதன்போது ஆராயப்படுகிறது.

இதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இன்று இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவுள்ளனர்.

இந்த பிரேரணை நாளைய தினம் உறுப்பு நாடுகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரும் புதிய பிரேரணையின் வரைபு அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த பிரேரணையை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டெனெக்ரோ மற்றும் மெசடோனியா ஆகிய நான்கு நாடுகள் சமர்ப்பித்துள்ளன.

இந்தப் பிரேரணை தொடர்பிலான திருத்தங்கள் கோரப்பட்டிருந்ததுடன், நாளை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக புதிய பிரேரணை வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான 30/1 பிரேரணையின் அமுலாக்கத்தை தொடர்ந்தும் மதிப்பீடு செய்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாடுகளை நம்பியே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் தமது உறவுகளை மக்கள் ஒப்படைத்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விவகாரம் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்