இலங்கை தொடர்பிலான பிரேரணையின் அமுலாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கை தொடர்பிலான பிரேரணையின் அமுலாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2017 | 7:12 pm

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரும் புதிய பிரேரணையின் வரைபு வெளியாகியுள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் கடந்த 27 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

இலங்கை தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு 2019 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கோரும் பிரேரணையின் வரைபு நேற்று (13) வெளியாகியுள்ளது.

இந்தப் பிரேரணையை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டெனெக்ரோ மற்றும் மெசடோனியா ஆகிய நான்கு நாடுகள் சமர்ப்பித்துள்ளன.

இந்தப் பிரேரணை தொடர்பிலான திருத்தங்கள் கோரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 23 ஆம் திகதி பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக புதிய பிரேரணை வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைபில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான 30/1 பிரேரணையின் அமுலாக்கத்தை தொடர்ந்தும் மதிப்பீடு செய்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்