இன்ப்ளுயன்சா H1N1 தொற்றினால் வவுனியாவில் பெண்ணொருவர் உயிரிழப்பு

இன்ப்ளுயன்சா H1N1 தொற்றினால் வவுனியாவில் பெண்ணொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 5:35 pm

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் இன்ப்ளுயன்சா H1N1 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்ததாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் குலலிங்கம் அகிலேந்திரன் தெரிவித்தார்.

கெப்பத்திக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குழந்தையொன்றைப் பிரசவித்த 12 நாட்களின் பின்னர் இந்தப் பெண் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேதப் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்ப்ளுயன்சா H1N1 தொற்றுக்குள்ளான 7 பேர் வவுனியாவில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக டொக்டர் குலலிங்கம் அகிலேந்திரன் தெரிவித்தார்.

அவர்களில் 5 பேர் சிகிச்சைகளைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன் மேலும் இருவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்களே இன்ப்ளுயன்சா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளாவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் குலலிங்கம் அகிலேந்திரன் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்