முறிகள் விநியோகம்: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

முறிகள் விநியோகம்: அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 8:54 pm

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சிக்கலாக அமைந்த, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கான அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிபர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் ஏற்பட்ட சிக்கலே கடந்த வியாழக்கிழமை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதற்கு காரணமாக அமைந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி ஊடாக, அந்த வருடத்திற்கான முறிகள் விநியோகம் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டமை குறித்து, முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை கூடிய சந்தர்ப்பத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பதிவு செய்யப்பட்ட சமபங்கு பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களுக்கு அமைய, அப்போதைய நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விடயங்களை வினவிய சந்தர்ப்பத்தில், இது குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் கூறினார்.

அதன் பிரகாரம், அரச அச்சக அதிபரிடம் இந்த விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றைக் கோரி, ஆணைக்குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் இடவில்லை எனின் மத்திய வங்கியின் அதிகாரிகள், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சருக்கு எதிராக உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்தது.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி என கருதப்படும் மத்திய வங்கியின் முறிகள் மோசடி குறித்து, மஹிந்த ராஜபக்ஸ 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருப்பார் என்பதை நம்ப முடியாதுள்ளதாக, அறிக்கை ஒன்றின் ஊடாக ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டார்.

முறிகள் மோசடி தொடர்பான விடயங்களை வேண்டும் என்றே மறைப்பதற்காவும் அதற்கான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த வர்த்தமானி அறிவித்தலைப் பயன்படுத்துவதற்கு முறிகள் மோசடியின் முக்கியஸ்தர்கள் முயற்சிப்பது புலப்படுவதாக ஊழலுக்கு எதிரான முன்னணி சுட்டிக்காட்டியது.

பிரச்சினைக்குரிய அதிவிசேட வர்த்தமானி தொடர்பான அறிக்கை தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அதனை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரச அச்சக அதிபர் கங்கானி கல்பனி லியனகே, இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது கூறினார்.

இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தம்மிடம் பல்வேறு விடயங்கள் வினவப்பட்டதாகவும் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளதாகவும் அரச அச்சக அதிபர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்