பரவிபாஞ்சானில் 3 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை

பரவிபாஞ்சானில் 3 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2017 | 9:00 pm

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்புப் போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கரைச்சி பிரதேச செயலாளர் தலைமையிலான குழு நேற்று குறித்த பகுதிக்கு சென்று கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், அவர்களுக்கு மக்கள் தமது காணிகளை அடையாளங் காட்டியுள்ளனர்.

இதனை அடுத்து இன்றைய தினம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மக்கள் தங்களின் காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்.

இதேவேளை, இராணுவ முகாமிலிருந்து படையினர் தமது உடைமைகளை அப்புறப்படுத்தினர்.

பரவிபாஞ்சான் பகுதியில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து இலங்கை இராணுவத்தினரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

அந்த பகுதியில் 03 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

அதற்கான அனைத்து ஆவணங்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முழுமையாகக் காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்