ரவிராஜ் கொலை: விடுவிக்கப்பட்ட ஐவரையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

ரவிராஜ் கொலை: விடுவிக்கப்பட்ட ஐவரையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2017 | 7:11 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா நடராஜா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகளை விடுதலை செய்வதற்கு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் ஜூரிகள் சபையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு, ஜூரி சபையின்றி வழக்கை மீள விசாரிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வரும் சில குற்றச்சாட்டுக்களும் அடங்கியிருந்ததால், அத்தகைய வழக்கொன்றை ஜூரி சபை முன்னிலையில் விசாரிப்பது ஏற்புடையத்தல்ல எனவும் நடராஜா ரவிராஜின் மனைவி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தேர்ச்சி பெற்ற நீதிபதி ஒருவர் முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி விடுதலை செய்தது.

விடுதலை செய்யப்பட்டவர்களில் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு நாராஹேன்பிட்டி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்