இந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்

இந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2017 | 6:47 pm

இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் ஆரம்ப கொள்வனவாளர் ஒருவர் மற்றுமொரு ஆரம்ப கொள்வனவாளருக்காக விலை மனு தாக்கல் செய்த முதலாவது சந்தர்ப்பமாக, 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் அமைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நீதி அமைச்சு வளாகத்தில் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு கூடிய போது, மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்துள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பாக, மத்திய வங்கியின் கொள்முதல் தலைவராக இருந்த பிரதி ஆளுநர் பி.சமரசிறி சார்பாகவும் சட்டத்தரணிகள் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

பி.சமரசிறி சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜரானமைக்கு சட்ட மா அதிபர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் அதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப கொள்வனவாளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்படும் தொகையை விட கூடுதலான தொகைக்கு முறிகளை விநியோகிப்பதற்கான அனுமதி முன்னர் வழங்கப்பட்ட சந்தர்ப்பமுள்ளதா என மத்திய வங்கி ஆளுநரிடம் வினவப்பட்ட போது, தாம் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை அறியவில்லை என கூறினார்.

ஏற்கனவே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தமது தரப்பு வழங்கியுள்ளதாகவும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.

அந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அதிகாரிகள் கோரிய போதிலும், அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சட்டத்தரணி கூறினார்.

மத்திய வங்கிக்குள் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் குறித்து ஊழியர்களிடம் உள்ளக மட்டத்திலான விசாரணை நடத்தப்பட்டதா என ஆணைக்குழு வினவிய போது, அத்தகைய விசாரணை நடத்தப்படவில்லை என கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.

தற்போதைய ஆளுநர் மத்திய வங்கியில் இடம்பெற்ற தவறுகளைத் திருத்தாமல் செயற்படுவதாக அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்த போது, ஒரு சிலர் தவறு இழைத்தாலும் மத்திய வங்கியில் சிறந்த ஊழியர்களே உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமது வளாகத்தை சுத்திகரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ள நிலையில் நிதி அமைச்சின் செயலாளர் அங்கு சாட்சியமளிக்கவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்