முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 8:35 pm

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று (20) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது சில எலும்புத் துண்டுகளுடன், இரண்டு பித்தளை மாலைகள் மற்றும் கம்பித் துண்டுகளும் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி, மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வி.சி.எஸ். பெரேரா, புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் இன்று அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாளையும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முறக்கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் குழி தொடர்பில் கடந்த இரண்டாம் திகதி களஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தனியார் காணியொன்றில் நிர்மாண வேலைகளின் பொருட்டு குழியொன்றை தோண்டுவதற்கு முற்பட்டபோது அதில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கக்கூடிய எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் காணி உரிமையாளர், ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குழியிலிருந்து பெறப்பட்ட எச்சங்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனை அடுத்து முறக்கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தனியார் காணியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்