மாலைத்தீவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்ட கல்முனை மீனவர்கள் நாடு திரும்பினர்

மாலைத்தீவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்ட கல்முனை மீனவர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 7:19 pm

மாலைத்தீவின் வடக்கு தீவான, தித்து தீவில் இருந்து 400 மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்ட கல்முனை மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற 6 மீனவர்கள் காணாமற்போயிருந்தனர்.

இலங்கை கடற்பரப்பில் மீனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தகவல் எதுவும் கிடைக்காமையினால் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு தேடுதல் பணிகளுக்காக கோரப்பட்டிருந்தது.

எரிபொருள் முடிவடைந்தமையினால் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு படகுகளில் இருந்த ஆறு மீனவர்களில் இருவரை மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு பிரிவினர் கடந்த மாதம் 5 ஆம் திகதி மீட்டிருந்தனர்.

ஜனவரி 12 ஆம் திகதி மாலைத்தீவின் வடக்கு தீவான தித்து தீவில் இருந்து 400 மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஏனைய நான்கு மீனவர்களையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

மாலைத்தீவு அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஆறு மீனவர்களில் ஐந்து பேர் நேற்று விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மற்றுமொரு மீனவர் படகை பழுதுபார்ததன் பின்னர் கடல்வழியாக நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக நாடுதிரும்பியுள்ள மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை மீனவர்கள் நாடு திரும்பியதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்