பிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 8:54 pm

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உறுப்பினர் எம்.கலீல் ஆகியோரின் விளக்கமறியலே மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 11 ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்