இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 8:09 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, இந்திய வெளியுறவுச் செயலாளர் சுப்ரமணியம் ஜெயஷங்கர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரை இன்று சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறு்ப்பினர்கள் இன்று (20) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இந்திய வெளியுறவுச் செயலாளரை, தமிழர் முற்போக்கு கூட்டணியினரும் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும், இந்திய வெளியுறவுச் செயலாளரை இன்று சந்தித்தனர்.

இதேவேளை, இந்திய வெளியுறவுச் செயலாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை சந்தித்தார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று மாலை சந்தித்தார்.

இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் புதிய திட்டங்கள், முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக த நியூஸ் இன்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் சுற்றுலா விவகாரங்கள் தொடர்பிலும் அவரின் விஜயத்தின்போது, கவனம் செலுத்தப்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்