களுத்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

களுத்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 2:05 pm

களுத்துறை, கட்டுகுருந்த கடற்பரப்பில் இன்று பிற்பகல் படகொன்று கவிழ்ந்து அனர்த்தத்திற்கு உள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்தத்தில் சிக்கிய படகிலிருந்த மேலும் பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் கூட்டாக நடத்திய தேடுதலில் இவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மத வழிபாடொன்றில் கலந்துகொண்ட பின்னர் படகில் திரும்பிக்கொண்டிருந்தவர்களே அனர்த்தத்திற்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.

சம்பவத்தில் உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மூவரது சடலங்கள் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

காப்பாற்றப்பட்டவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனவும் பொலிஸார் கூறினர்.

அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடலில் காணாமற்போனோரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நான்கு டோரா படகுகளும், 6 டிங்கி படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்