ஊழல் குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன துணைத் தலைவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன துணைத் தலைவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன துணைத் தலைவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 3:29 pm

தென் கொரிய அதிபரைப் பதவி நீக்கம் செய்ய வித்திட்ட ஊழல் வழக்கு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யோங் (48) கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரிய அதிபராக இருந்த பார்க் கியூன் ஹையின் நெருங்கிய தோழி, அவரது நட்பைத் தவறாகப் பயன்படுத்தி, சாம்சங், ஹுண்டாய் உள்ளிட்ட பிரபல தென் கொரிய நிறுவனங்களிடம் ரூ. 500 கோடிக்கும் மேலாக நிதி திரட்டினார் என்றும், முக்கிய அரச நியமனங்களில் தலையிட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

நிதி மோசடி உள்ளிட்ட முறைப்பாடுகளின் பேரில் சோய் சூன் சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அதிபர் பார்க் கியூன் ஹை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பல்வேறு நிலைகளில் ஊழல் விவகாரம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் கொரிய அரசியலைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவரிடம் அரச சட்டத்தரணி கடந்த மாதம் 12 ஆம் திகதி 22 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.

தொடர்ந்து பல முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஆதாரம் இருப்பதாகக் கூறி அதற்கான உத்தரவை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்தது.

இதனையடுத்து, லீ ஜே யோங் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவின் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங்கின் உரிமையாளர் லீ குன் ஹீ உடல் நலக் குறைவால் பணியிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், உலகளாவிய அந்த நிறுவனத்தை அவரது மகன் லீ ஜே யோங் நிர்வகித்து வருகிறார்.

அவரது கைது நடவடிக்கை சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், தென் கொரியாவின் தொழிற்துறைக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தென் கொரியப் பொருளாதாரத்தில் சாம்சங் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 20 சதவீதம் என்று கூறப்படுகிறது.

செல்பேசி தயாரிப்பில் உலகில் முதலிடம் வகிக்கிறது சாம்சங்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்