இரண்டு விலைகளில் அரிசி விற்பனை: நுகர்வோருக்கு பயன் கிட்டவில்லை

இரண்டு விலைகளில் அரிசி விற்பனை: நுகர்வோருக்கு பயன் கிட்டவில்லை

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 10:16 pm

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் உள்நாட்டு அரிசியும் இரண்டு விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு பயன் கிட்டவில்லை என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்தது.

அரிசிக்காக இரண்டு நிர்ணய விலைகளை அமுல்படுத்தியமை அரிசியின் தரத்திற்கு பாதிப்பாக அமையும் என அவ்வமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

இறக்குமதியாகும் அரிசி மற்றும் உள்நாட்டு அரிசிக்கு இரண்டு நிர்ணய விலைகளை வழங்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரிசி உற்பத்தியாளர்கள் கோரியிருந்தனர்.

வாழ்க்க்கைச் செலவு தொடர்பான உப குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கருத்திற்கொண்டு, புதிய விலை உள்ளடக்கப்பட்ட வர்த்தமானியை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய நிர்ணய விலைக்கு அமைய, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 72 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் உள்நாட்டு நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் விலை 70 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு பச்சை அரிசியின் விலை 78 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான 80 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்பதுடன், ஒரு கிலோகிராம் உள்நாட்டு சம்பா அரிசியை 90 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் அரசியின் விலை தொடர்பில் கண்காணிப்பதற்காக, நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர் இன்று கொழும்பின் சில பகுதிகளுக்கு சென்றிருந்தனர்.

புதிய நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அந்த விலைக்கு உள்நாட்டு அரிசியை விற்பனை செய்ய முடியாது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்