வடக்கு, கிழக்கு முதல்வர்களுடன் சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு

வடக்கு, கிழக்கு முதல்வர்களுடன் சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 9:15 pm

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்களை சர்வதேச பிரதிநிதிகள் சிலர் இன்று சந்தித்தனர்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்க் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் உனா மெக்கோலே ஆகியோர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வட பகுதியில் தங்கியிருக்கும் இவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடவுள்ளனர்.

GSP வரிச்சலுகை தொடர்பிலும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் தொடர்பிலும் காணிப் பிரச்சினைகள் குறித்தும் சர்வதேசப் பிரதிநிதிகளுடன் தாம் கலந்துரையாடியதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு மாற்றம், முதலீட்டு வழிவகைகள், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்