முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயற்படப்போவதாக தீபா அறிவிப்பு

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயற்படப்போவதாக தீபா அறிவிப்பு

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயற்படப்போவதாக தீபா அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 10:24 am

ஜெயலலிதா ஜெயராமின் அண்ணன் மகள் ஜே.தீபா, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் ஜே.தீபா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்தனர்.

ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருவரும் ஜெயலலிதாவின் சமாதிக்கு நேற்றிரவு 9.30 அளவில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜே.தீபா, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருகரம் கோர்த்து இணக்கப்பாட்டுடன் செயற்படவுள்ளதாக கூறியுள்ளார்.

தமது அரசியல் பயணம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜே.தீபா, சசிகலா உள்ளிட்ட குழுவினர் எங்கு இருக்க வேண்டுமோ அந்த இடத்திற்கே செல்லவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டமன்ற அதிமுக தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இதேவேளை, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வி.கே.சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சிறைச்சாலையில் இவர்கள் மூவருக்குமான அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட மூவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் இருந்து வி.கே.சசிகலா நேற்று இரவு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மூவரும் இன்றைய தினம் சரணடைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்