சசிகலா தாக்கல் செய்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி

சசிகலா தாக்கல் செய்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி

சசிகலா தாக்கல் செய்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் தள்ளுபடி

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2017 | 1:34 pm

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தமிழகம் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் வியாபித்துள்ளது.

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கோரி அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அந்த மனுவில், நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்னதாக கட்சி விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால் அவகாசம் தேவைப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய பின்னர், முதல் முறையாகப் சசிகலா நேற்று கூவத்தூரில் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் தீர்ப்புக் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

இதனையடுத்து போயஸ் இல்லத்திலிருந்து இன்று (15) காலை ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து அவர் தற்போது பெங்களூர் அக்ரஹாரா சிறைச்சாலையில் சரணடைய புறப்பட்டுச் சென்றுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நோக்கம் கருதி பெங்களூர் நீதிமன்ற தொகுதி அக்ரஹாரா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வி.கே.சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றிரவு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்த ஜே.தீபா தாம் இணக்கப்பாட்டுடன் செயற்படவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தீபா தனது அரசியல் பயணம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற அதிமுக தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று (14) ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ள நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் சசிகலாவின் அக்கா மகனும் அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்