கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது: வட மாகாண ரீதியாக போராட்டம் நடத்தத் தீர்மானம்

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது: வட மாகாண ரீதியாக போராட்டம் நடத்தத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 8:27 pm

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படை முகாம் அமைந்துள்ள தமது காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று 16 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

கேப்பாப்பிலவு மக்கள் இந்தப் போராட்டத்தைக் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பித்தனர்.

வெயில் – குளிர், இரவு – பகல் பாராது விமானப்படை முகாம் முன்பாக மக்கள் தமது சொந்தக் காணிக்கான உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் தினமும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஜனாதிபதியுடன் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போது, காணி விடுவிப்பிற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், தமது சொந்தக் காணியில் குடியேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என பிலக்குடியிருப்பு மக்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பிலக்குடியிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பு இராணுவ முகாமை அகற்றக்கோரியும் புதுக்குடியிருப்பில் மக்கள் பதின்மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், இன்றும் புதுக்குடியிருப்பு மக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ரீதியாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, பிலக்குடியிருப்பில் விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பது தொடர்பில் எவ்வித ஆலோசனைகளும் விமானப்படைக்குக் கிடைக்கவில்லை என்ற போதிலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்