வட மேல் மாகாணத்திற்கான பாரிய நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைப்பு

வட மேல் மாகாணத்திற்கான பாரிய நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 12:08 pm

வட மேல் மாகாணத்திற்கான பாரிய நீர் விநியோகத் திட்டம், இன்று ஜனாதிபதி தலைமையில், கலேவெல வெவமடில்ல பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மேல் மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

வட மேல் மாகாணத்திற்கான நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் வெவமடில்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மீஓயா மேற்கிலுள்ள நீரேந்து பகுதி மற்றும் ஹக்வட்டுனா ஓயா நீர்த்தேக்கத்திற்கு மகாவலி ஆற்று நீரைத் திருப்பி, குருணாகல் மாவட்டத்தின் வட பிராந்தியத்தில் அமைந்துள்ள பல குளங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், நீருக்கான தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இலக்காகக் கொண்டு, வட மேல் மாகாண கால்வாய் விஸ்தரிப்புத் திட்டம், மகாவலி நீர் பராமரிப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், குருநாகல் மாவட்டத்தின் வட பிராந்தியத்திற்கு மகாவலி நீரை சுமார் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீரை விநியோகிக்க இயலுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக 15,000 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின்போது காணிகளை இழப்போரை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்