கூகுள் லூன் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுமாறு ஊழலுக்கு எதிரான முன்னணி வலியுறுத்தல்

கூகுள் லூன் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுமாறு ஊழலுக்கு எதிரான முன்னணி வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2017 | 8:47 pm

கூகுள் லூன் திட்டம் தொடர்பாக ஊழலுக்கு எதிரான முன்னணி, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் wifi வலயங்களை அமைத்து அதிவேக இணைய வசதியை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட, கூகுள் லூன் திட்டம் தொடர்பில் தற்போது நாட்டிற்குள் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதால் அது தொடர்பிலான தெளிவூட்டல் அவசியம் என ஊழலுக்கு எதிரான முன்னணி தொலை தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் வசந்த தேசப்பிரியவிற்கு அறிவித்துள்ளது.

ராமா என்ற நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரரின் கையெழுத்துடன் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் இலங்கை வம்சாவளியான அமெரிக்க வர்த்தகருக்கு சொந்தமாகவுள்ளதென சுட்டிக்காட்டும் ஊழலுக்கு எதிரான முன்னணி, இந்த நிறுவனத்தின் ஊடாக பிலிபைன்சிலும் இலங்கையிலும் அலை கற்றைகளை கொள்வனவு செய்யும் முயற்சி நிலவுகின்றமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நாடொன்றின் அலை கற்றை என்பது தேசிய வளம் என்பதால் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போர்வையில் இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கப்படுமாயின் அது தேசிய பேரழிவாக அமையும் என முன்னணி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராமா நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள் தொடர்பாகவும் ஏற்கனவே இந்த திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலும் தெளிவுபடுத்தல் அவசியம் என ஊழலுக்கு எதிரான முன்னணி, தொலை தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டம் தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகுந்தன் கனகேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்.

தொலைபேசி வாயிலாக கருத்து வெளியிடுவதற்கு தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்த, முகுந்தன் கனகேய், எமது கலையகத்திற்கு வருகைதந்து கருத்து வெளியிடுவதையும் நிராகரித்தார்.

அவரது அலுவலகத்திற்கு வருகைத்தந்து கருத்துக்களை பதிவு செய்துகொள்ளுமாறு அவர் தொடர்ந்தும் கூறினார்.

நாம் வழங்கிய சந்தர்ப்பத்தை முகுந்தன் கனகெய் நிராகரித்ததுடன், அவர் இருக்கும் இடத்திற்கு சென்று கருத்துக்களை பதிவு செய்வதற்கு நாம் கட்டுப்படவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

அவரது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்கு நாம் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்