ஆளுநரை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தீபாவின் ஆதரவாளர்கள் சிலர் கைது

ஆளுநரை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தீபாவின் ஆதரவாளர்கள் சிலர் கைது

ஆளுநரை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தீபாவின் ஆதரவாளர்கள் சிலர் கைது

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 8:23 pm

குழப்பகரமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

சந்திப்பின் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தாலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தெளிவாக எதனையும் குறிப்பிடவில்லை.

இதேவேளை, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திப்பதற்கு முன்னர் அதிமுக வின் பொதுச்செயலாளர் வீ.கே.சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தமக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை, ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தியதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், வீ.கே. சசிகலாவுக்கு ஆதரவளிக்கும் அதிமுக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியார் ஹோட்டல்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு ஆதரவான 15 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் 50 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அதிமுக வின் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சட்மன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக உள்ளதாக, அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வீ.கே. சசிகலா தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கும், அதிமுக வின் பொதுச்செயலாளர் வீ.கே. சசிகலாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்