பன்னீர் செல்வத்தின் தியானப்புரட்சி அரசியல் போக்கை மாற்றுமா: தமிழக அரசியல் களம் குறித்த விசேட செவ்வி

பன்னீர் செல்வத்தின் தியானப்புரட்சி அரசியல் போக்கை மாற்றுமா: தமிழக அரசியல் களம் குறித்த விசேட செவ்வி

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 8:59 pm

தமிழக அரசியல் களத்தில் தோன்றியுள்ள கேள்விகள், குழப்பங்கள், சர்ச்சைகள் தொடர்பில் ஊடவியலாளரும் எழுத்தாளருமான ராஜ்மோகன் ஆறுமுகம் நியூஸ்பெஸ்ட்டிற்கு வழங்கிய விசேட செவ்வி.

கேள்வி: சசிகலா முதலமைச்சராக வேண்டுமென்றால் அவருக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன?

பதில்: தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு முக்கியமான தகுதி அதிகப் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அது சசிகலா அம்மையாருக்கு இருப்பதாக அவரே கூறுகிறார். ஆனால், அது மட்டும் போதாது ஆளுநர் அவருடைய விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யாது ஏற்றுக்கொள்ள வேணடும். அதற்கு சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது அங்கு அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு சாதகமாக வாக்குகளை வழங்கவேண்டும். அதுமட்டுமல்லாது, பொதுமக்களின் அபிமானம் என்றும் ஒன்றுள்ளது. சட்ட ரீதியாக அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது. அவர் ஒரு ஊழல் வழக்கில் தண்டனை பெறாத குற்றவாளி என்று சட்டரீதியாக வழக்கில் வெற்றிபெற்ற பிறகுதான் முதலமைச்சராக முடியும். அதுதான் முக்கியமான தகுதி.

கேள்வி: பன்னீர்செல்லம் இராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துள்ள நிலையில் மீண்டும் முதலமைச்சராக நீடிப்பதற்கு வாய்ப்புள்ளதா?

பதில்: பன்னீர் செல்வம் இராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்திருந்தாலும் கூட அது வற்புறுத்தலின் பேரில் கொடுக்கப்பட்டதாக அவரே குறிப்பிட்டிருந்தார். அது எத்தகைய வற்புறுத்தல், உயிர் அச்சுறுத்தல் இருந்ததா போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. எனவே, எனது இராஜினாமாக் கடிதத்தை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று அவர் அளுநரிடம் விண்ணப்பம் செய்யும்போது, அவர் முதலில் கொடுத்த அந்த பதவி விலகல் கடிதத்தை இரத்து செய்கின்ற அதிகாரம் ஆளுநருக்கு முழுமையாக இருக்கின்றது. எனவே இவர் கொடுத்த இராஜினாமா விண்ணப்பத்தை வாபஸ் பெறுகின்றபொழுது பன்னீர்செல்வமே தொடர்ந்தும் முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

கேள்வி: அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா அந்தக் கட்சியில் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான அதிகாரம் இருக்கிறதா?

பதில்: எந்தவொரு கட்சியிலும் ஒரு பொதுச்செயலாளர், ஒரு பொருளாளரை ஏதோ ஒரு பரோட்டா போடுகின்ற சமையல்காரரை நீக்குவது போல நீக்க இயலாது. இதற்கு முன்னால் திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களை நீக்கும்போது கூட ஒரு பொதுக்குழு கூடி அந்தப் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் முடிவு எடுத்து, நீக்கத்தை அங்கீகரிக்க முடியும். அதேபோன்று, அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களோ அல்லது சிறப்புக்குழு உறுப்பினர்களோ கையெழுத்திட்ட உத்தரவின் பின்னர் தான் ஒரு பொருளாளரை நீக்க முடியும். இதற்கு எதிராக பன்னீர்செல்வம் வழக்குத் தொடர முடியும். இந்த நீக்கமானது எவ்வளவு உறுதியானது என்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியாது.

கேள்வி: பன்னீர்செல்வத்தின் திடீர் தியானப்புரட்சி பற்றி?

பதில்: மெரினாவில் மாணவர் புரட்சி நடந்திருக்கிறது, இளைஞர் புரட்சி நடந்திருக்கிறது, தற்போது தியானப்புரட்சி, செயல் மூலமாக தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கின்ற இந்தப் புரட்சியானது தலைமையற்ற தலைமை, அரசியலற்ற அரசியல். இதுவரையிருந்த அரசியல் தலைமைகளிலிருந்து இது மாறுபட்ட ஒரு இளைஞர்களின் எழுச்சி. அனைத்துமே மெரினா கடற்கரையிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. அதேபோல, இந்த தியானப் புரட்சியும் இனிவரும் அரசியல் போக்கை இதுவரை காலமும் இருந்த போக்குகளிலிருந்து மாற்றியமைக்கக்கூடிய ஒரு புதுவகையான போக்காக மாறும் என நம்பமுடிகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்