இராஜினாமா செய்ய  கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார் பன்னீர்செல்வம்: திமுக வின் தூண்டுதல் என்கிறார் சசிகலா

இராஜினாமா செய்ய  கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார் பன்னீர்செல்வம்: திமுக வின் தூண்டுதல் என்கிறார் சசிகலா

இராஜினாமா செய்ய  கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார் பன்னீர்செல்வம்: திமுக வின் தூண்டுதல் என்கிறார் சசிகலா

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 3:50 pm

கட்டாயப்படுத்தி தன்னை இராஜினாமா செய்ய வைத்ததாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட கருத்தினால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கடையிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் நினைவிடத்திற்கு சென்ற பன்னீர்செல்வம், சுமார் 40 நிமிடங்கள் அங்கு தியான நிலையில் அமர்ந்திருந்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு மாறாக, அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

முதலமைச்சராக தம்மை நியமித்து அவமானப்படுத்தும் வகையிலான பல்வேறு செயற்பாடுகளை சசிகலா உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டாயப்படுத்தலின் பேரிலேயே இராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்ததாக தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் விரும்பினால் அதனை மீளப்பெறவும் தயார் என கூறினார்.

பன்னீர்செல்வம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடுத்து, போயஸ் தோட்ட இல்லத்தில் வி.கே.சசிகலா, தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இன்று அதிகாலை 1.15 அளவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் இணக்கத்தோடு செயற்பட்டு வந்ததாகத் தெரிவித்த சசிகலா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூண்டுதலின் பேரிலேயே அவர் தற்போது செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் விரைவில் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்படுவார் என வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தம்மை எவராலும் பொருளாளர் பதவியில் இருந்து நீக்க முடியாது என பன்னீர்செல்வம் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் இருவேறு நிலைப்பாடுகளில் இருப்பதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில பகுதிகளில் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிற்கு ஆதரவாக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்களை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜெயராமின் மறைவை அடுத்து முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற வி.கே.சசிகலாவை முதலமைச்சராகவும் நியமிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற ஆரம்பித்தது.

நேற்றைய தினம் அவர் முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்