ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் கொலை: சந்தேகநபர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் கொலை: சந்தேகநபர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2017 | 7:14 pm

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்காவற்துறையில் 25 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கடந்த மாத இறுதிப்பகுதியில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் உத்தரவு பிறப்பித்ததுடன், எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்தார்.

கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் தலையின் பின்புறம் பலமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

யாழ்.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றும், குறித்த பெண்ணின் கணவர் பணிக்குச் சென்றிருந்தபோதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கொலை செய்யப்பட்ட ந.கம்சிகா எனும் இந்தப் பெண், 4 வயது பெண் பிள்ளையின் தாயாவார்.

இந்தக் கொலை தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்