மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக 11.34 கோடி செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது

மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக 11.34 கோடி செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது

மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக 11.34 கோடி செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 8:08 pm

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட விமானப் பயணங்களுக்காக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 11 கோடிக்கும் அதிகத் தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அந்த நிதியை ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக தற்போது செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட 10 விமானப் பயணங்களுக்காக 11.34 கோடி ரூபா ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் இரண்டு முறை திருப்பதிக்கு சென்றமைக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களும் இதில் அடங்கும்.

2014 டிசம்பர் மாதம் 18 மற்றும் 31 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்களுக்கு அமைய, திருப்பதி விஜயத்திற்காக 39 இலட்சத்திற்கும் அதிகக் கட்டணத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதியிடப்பட்ட பட்டியலுக்கு அமைய, கொழும்பு மற்றும் தென் ஆபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க்கிற்கு இடையிலான விமானப் பயணத்திற்காக, ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் UL 1081/2 இலக்க விமானத்தை வாடகைக்குப் பெற்றமைக்காக மூன்றரைக் கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 மற்றும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிகளில் UL 4571 இலக்க விமானத்தை வாடகைக்கு பெற்றமைக்காக 5 கோடிக்கும் அதிகத் தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

ரோம் மற்றும் மிலானோ சுற்றுலாவிற்காக குறித்த விமானம் பெறப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 15 ஆம் திகதிகளில் காத்மண்டு மற்றும் மாலைத்தீவிற்கு மேற்கொண்ட பயணங்களுக்காக பயன்படுத்திய UL 001 மற்றும் UL 4111 ஆகிய விமானங்களுக்கு 2.8 கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.

அநேகமான வெளிநாட்டு பயணங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு மேலதிகமாக தனிப்பட்ட நண்பர்கள் உள்ளிட்ட அதிகளவிலானவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்