விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய பணிப்பெண்

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய பணிப்பெண்

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய பணிப்பெண்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 5:03 pm

அமெரிக்காவில் இயங்கி வரும் அலாஸ்கா எயார்லைன்ஸ் விமானத்தில் ஷீலா ஃப்ரடெரிக் (49) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணாக சேவையாற்றி வருகின்றார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சீட்டில் நகரிலிருந்து விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது 14 வயதுடைய சிறுமியை அவதானித்துள்ளார்.

சிறுமிக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் நாகரீக உடையிலும், சிறுமி பழுதான ஆடையிலும் இருந்ததால் பணிப்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தீர்த்துக்கொள்ள சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமியிடம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் அருகில் அமர்ந்திருந்த நபர் மட்டுமே இடைமறித்து பதிலளித்துள்ளார்.

நபரின் நடவடிக்கை சந்தேகத்தை அதிகரிக்க, சிறுமியிடம் கண் ஜாடை ஒன்றைக் காட்டிவிட்டு விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர், கழிவறையில் ‘நீ எதாவது சிக்கலில் இருக்கிறாயா, உனக்கு உதவி தேவையா?’ என தாளில் எழுதி வைத்துவிட்டு பணிப்பெண் திரும்பியுள்ளார்.

பணிப்பெண் திரும்பியதும் சிறுமி கழிவறைக்கு சென்று அந்த கடிதத்தைப் படித்துவிட்டு ‘ஆமாம், என்னை அந்த நபர் கடத்திச் செல்கிறார். எனக்கு உங்களுடைய உதவி தேவை’ என பதில் எழுதி வைத்து விட்டு இருக்கைக்குத் திரும்பியுள்ளார்.

கழிவறைக்கு மீண்டும் சென்ற பணிப்பெண் சிறுமியின் பதிலைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதனை விமானிகளுக்கு உடனடியாகத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, விமானிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் தரையிறங்கியதும், அங்கு காத்திருந்த பொலிஸார் நபரைக் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

சிறுமியை தனது சமயோசித திறமையால் மீட்க உதவிய பணிப்பெண்ணை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்