விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 3:53 pm

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விமல் வீரவன்சவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இரண்டாம் சந்தேகநபராக ஆஜர்படுத்தப்பட்டிருந்த அரச பொறியியற்கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த லொக்குஹென்னதிகேவும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பிணை வழங்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் வழக்குத் தினத்தன்று அறிவிப்பதாக நீதவான் இன்று தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவினால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 40 வாகனங்களை, அவருக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த அரச பொறியியற்கூட்டுத்தாபன முன்னாள் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க, மற்றைய தலைவர் ஆகியோர் சுற்றறிக்கை மற்றும் நடைமுறைக்கோவை விதிகளைப் பின்பற்றி வாகனங்களை வழங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கும் மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த வாகனங்கள் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது என்றும் விசாரணைகளை மேற்கொண்ட உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளனர்.

அமைச்சின் தற்போதைய செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் பிரகாரம், முன்னாள் பிரதியமைச்சருக்கு மூன்று வாகனங்களைப் பெற்றுக்கொடுத்தமைக்காக அரச பொறியியற்கூட்டுத்தாபனத்தின் வாகனங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரே பொறுப்புக்கூற வேண்டும் என தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்