மாலபே மருத்துவக் கல்லூரி தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஸ

மாலபே மருத்துவக் கல்லூரி தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 8:37 pm

மாலபேயிலுள்ள சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகாரத்தில் இருந்தபோது கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கும் தற்போதைய நிலைப்பாட்டிற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

[quote]இன்று வைத்திய கல்லூரியின் மாணவர்கள் சைட்டமுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர்… அவர்களுடைய தந்தையர்கள் எளியவர்களாக இருக்கின்றமையால் அவர்களுக்கு இதில் இடம் கிடைக்கவில்லை. வைத்தியர்கள் ஆகுவதற்கு சில விதிமுறைகள் காணப்படுகின்றன. கண்டவர்களுக்கெல்லாம் வைத்தியர்களாக முடியாது. சட்டத்தால் அதில் கைவைக்க முடியாது. அவ்வாறாயின் இந்த நாட்டில் உள்ள எல்லோரும் அதற்கு முயல்வர்.[/quote]

இதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தற்போதைய கருத்தாகும்.

எவ்வாறாயினும், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில் அதற்கு மாற்றமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

சைட்டம் என்றழைக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான தெற்காசிய நிறுவனத்தை, மருத்துவப் பட்டம் வழங்கும் நிறுவனமாக 2011 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்தது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது, மருத்துவப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட சைட்டம் நிறுவனத்திற்கு முதலீட்டு சபையினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 28 ஆம் திகதி சைட்டம் நிறுவனத்தில் மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக பத்து மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டமை மற்றுமொரு முக்கிய விடயமாகும்.

உயர்தரப் பரீட்சையின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று விசேட சித்திகளைப் பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்குப் பிரவேசிக்கும் வாய்ப்பை இழந்த 10 மாணவர்களுக்கு 70 இலட்சம் ரூபா வீதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புலமைப்பரிசில் வழங்கியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்