எழுக தமிழ் நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு தமிழ் பேசும் மக்களுக்கு விக்னேஷ்வரன் அழைப்பு

எழுக தமிழ் நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு தமிழ் பேசும் மக்களுக்கு விக்னேஷ்வரன் அழைப்பு

எழுக தமிழ் நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு தமிழ் பேசும் மக்களுக்கு விக்னேஷ்வரன் அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2017 | 7:23 pm

மட்டக்களப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள “எழுக தமிழ்” நடைபவனியில் கலந்துகொள்ளுமாறு தமிழ் பேசும் சகல மக்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலைநிறுத்துவதற்கே இந்த நடைபவனிக்கு “எழுக தமிழ்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களிடையே முரண்பாடுகள் திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு திணிக்கப்பட்டமைக்கு குறுகிய அரசியல் நோக்கங்கள் விதிவிலக்கன்று என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் பாதுகாப்புக் கருதியே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலமே தமிழ் பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்றும் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சமாதானம் இன நல்லுறவால் ஏற்பட்ட ஒன்று அல்லவெனவும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதனாலேயே பதவியில் உள்ளவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் பெரும் அளவிலான இராணுவத்தை வைத்திருக்க விளைவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு தமிழர்களிடம் இருந்து கிடைக்காது என்று கூறி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்த சிலர் முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றையெல்லாம் களைந்து, தமிழ் பேசும் மக்களிடயே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்