ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன்

ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 4:45 pm

தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் சந்தித்ததுடன் விமானப் படையினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

விமானப் படையினரின் முகாம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகலாக போராட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், அவ்விடத்தில் கறுப்புக் கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைச் சந்தித்தனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடன் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன், கந்தையா சிவநேசன் ஆகியோரும் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்