இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 7:59 pm

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் வரை, பழைய பஸ் தரிப்பிடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் 13 ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ்தரிப்பிடம் தங்களுக்கு வேண்டாம் என தெரிவித்தும், இதுவரை காலம் நகர் மத்தியில் காணப்பட்ட பழைய பஸ் தரிப்பிடத்தைக் கோரியும் கடந்த முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று கூட்டமொன்று, மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தின் போது இலங்கை போக்குவரத்து சபை சார்பில் யார் பங்கேற்பது என்ற பிரச்சினை ஏற்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்போது வட மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தின் பின்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான செ. மயூரன், ஏ.ஜயதிலக்க ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்