இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2017 | 2:52 pm

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று முற்பகல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தினத்திற்கான தேசிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முப்படைத்தளபதிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கொழும்பு இந்துக்கல்லூரி, கொழும்பு இராமநாதன் இந்துக்கல்லூரி, விவேகானந்தா கல்லூரி உள்ளிட்ட 110 பாடசாலைகளின் மாணவர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தினார்.

உலகில் சிறந்த சூபீட்சமான நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.

69 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் கொ்ணடாடுவதையிட்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாக ஜனாதிபதி கூறினார்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் நாட்டிற்கு துரோகம் இழைப்பவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நவீன தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு முனையும் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமூகத்திற்குத் தேவையான உந்துசக்தியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை அடுத்து முப்படையினரின் சாகச நிகழ்வுகள் நடைபெற்றன.

பாடசாலை மாணவர்களால் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், 69 ஆவது சுதந்தின தினத்திற்கான தேசிய நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்