வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபரின் பிணை மனு நிராகரிப்பு

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபரின் பிணை மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 7:07 pm

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

வித்தியாவின் கொலை வழக்கின் பத்தாம் இலக்க சந்தேகநபரின் பிணை மனு மீதான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

கொலை நடைபெற்ற ஏழு மாதங்களின் பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கும் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

எனினும், வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்து பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த பிணை மனுவை இன்று நிராகரித்துள்ளார்.

இதேவேளை, மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய 11 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்