நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்: 21 மாணவர்கள் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்: 21 மாணவர்கள் கைது

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 7:27 pm

நீதிமன்ற கட்டளையைக் கவனத்திற்கொள்ளாமல் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழு கொழும்பில் இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு மருத்துவ பீட முன்றலில் இருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள், ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸார் அவர்களைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

மக்கள் பாதிப்புறும் வகையிலான கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் உத்தரவைக் கொழும்பு மேலதிக நீதவான் இன்று பிறப்பித்திருந்தார்.

சுதந்திர தின ஒத்திகை இடம்பெறுகையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றால் பிரச்சினைகள் உருவாகலாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அதன்படி கோட்டை நீதவான் வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயணித்தல் என்பவற்றைத் தடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த தடை உத்தரவையும் கவனத்திற்கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை, எதிர்ப்பில் ஈடுபட்ட 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்