சுன்னாகம் நீர் மாசு: விசாரணைகளை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

சுன்னாகம் நீர் மாசு: விசாரணைகளை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 4:11 pm

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவெண்ணெய் கலந்துள்ளமை தொடர்பான விசாரணைகளை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பகிரங்க உத்தரவைப் பிறப்பித்துள்ள மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ. ஜூட்சன், இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவெண்ணெய் கலந்துள்ளமை தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் பலதரப்பட்ட உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், பல்வேறுபட்ட அறிக்கைகள் தொடர்பாக நீதிமன்றம் ஆராய்ந்தபோது, அவற்றில் பெரும்பாலான அறிக்கைகள் மூலம் மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குள் அமைந்துள்ள கிணறுகளில் கழிவெண்ணெய் கலந்துள்ளமை தெளிவாவதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித நுகர்விற்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியாது என்பதுடன், தொடர்ச்சியாக எண்ணெய்க் கழிவுகள் நிலத்திற்குள் செல்லக்கூடியவாறு உரிய சுகாதார நியமங்கள் பின்பற்றப்படாத நிலையில், 2009 இல் இருந்து நோர்தன் பவர் நிறுவனம் அந்த பகுதியில் இயங்கி வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆயினும், நிலத்தடி நீரில் இவ்வாறான மனித நுகர்விற்கு ஒவ்வாத பாரிய கழிவுகள் கலக்க வழிவகுத்தவர்கள் கைது செய்யப்பட்டு
சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர்களைக் காப்பாற்றும் வகையில் பல்வேறுபட்ட தரப்பினர்கள் முயற்சிப்பது போல் தோன்றுவதாகவும் மல்லாகம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கின் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் அதிகாரிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் மறைவான கரமொன்று குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிப்பதாகத் தென்படுவதாகவும் நீதிபதி ஏ. ஜூட்சன் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்