களனி பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கத் தடை

களனி பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கத் தடை

களனி பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கத் தடை

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2017 | 3:57 pm

கொழும்பில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாறு கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான பீட மாணவர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டப்படிப்பு சான்றிதழை இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கும் நோக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து களனி பல்கலைக்கழக மருத்துவ, விஞ்ஞான பீட மாணவர் சங்கம் உள்ளிட்ட 15 மாணவர் சங்கங்கள் இன்று பிற்பகல் கொழும்பின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

பொரளை மயான பிரதேசம், லிப்டன் சுற்றுவட்டம், காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, கோட்டை ரயில் நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலைய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதால் அப்பகுதிகளில் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்க கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற கட்டளையை மீறும்பட்சத்தில் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதை பிரதிவாதிகள் தரப்பிற்கு அறிவிக்குமாறும் பொரளை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன் பிரகாரம், நீதிமன்ற ரிட் கட்டளையை மீறுவோரை தயவுதாட்சண்யமின்றி கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்