பூசா முகாமில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளில் ஒருவர் வைத்தியசாலையில்

பூசா முகாமில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளில் ஒருவர் வைத்தியசாலையில்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 4:37 pm

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கவேலு நிமலனும், அவரது மனைவியும் கொழும்பு – இரத்மலானையில் வசித்து வந்தபோது 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைகப்பட்டனர்.

2013 ஆம் ஆண்டு மனைவி விடுதலை செய்யப்பட்ட போதிலும், 8 வருடங்களாகியும் நிமலனுக்கு விடுதலை கிட்டவில்லை.

கைதுசெய்யப்பட்ட நிமலன், கொழும்பு மெகசின், காலி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு தற்போது பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்தார்.

பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த ஒருவருமே பூசா தடுப்பு முகாமில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்