சட்ட ரீதியாக அல்லாத பதவிகளை வகிப்போர் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களின் போது பங்கேற்பதாக குற்றச்சாட்டு

சட்ட ரீதியாக அல்லாத பதவிகளை வகிப்போர் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களின் போது பங்கேற்பதாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 8:39 pm

அரசாங்கத்தின் பாரதூரமான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டுடன் சட்ட ரீதியாக அல்லாத பதவிகளை வகிக்கின்றவர்கள் தொடர்புபட்டிருப்பதாக அண்மைக்காலத்தில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

தெற்கு அபிவிருத்தி அதிகார சபை என்ற பெயரில் சட்ட ரீதியாகவல்லாத நிறுவனத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டு, ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கல்களுக்காக ஈடுபடுத்தியுள்ளமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான கொடுக்கல் வாங்கலை தடைசெய்யுமாறு கோரி ஜனவரி 11 ஆம் திகதி முன்னாள் அமைச்சு செயலாளரான கலாநிதி லலிதசிறி குணருவன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.

2013 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க திவிநெகும சட்டத்தின் ஊடாக தெற்கு அபிவிருத்தி அதிகார சபை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமையின் கீழ், ஷிரந்த ஹேரத் என்பவரை தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமித்து, துறைமுக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உபகுழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட செயலகத்திலும் இந்த பதவியை வகிக்கும் நபர் உள்ளடங்கியுள்ளதாக அடிப்படை உரிமை மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ள மனுதாரர், ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கலை இடைநிறுத்துமாறும் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு பெப்ரவரி மாதம் 3 அம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தொழிற்சங்க பயிற்சிகள் தொடர்பாக சீனத் தூதுவருடன் ஜனவரி 7 ஆம் திகதி மத்தல விமான நிலைய வளாகத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பாக அந்த உடன்படிக்கையில் தெற்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு பெயரிடப்பட்டுள்ள தலைவர் ஷிரந்த ஹேரத் கைச்சாத்திட்டுள்ளார்.

இதேவேளை, அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் என்ற பெயரில், நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராக மங்கல யாப்பா நியமிக்கப்பட்டமை தொடர்பாகவும் கடந்த நாட்களில் சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் கேள்வியெழுப்பினார்கள்.

சட்டரீதியாக அல்லாத நிறுவனமொன்றிற்கு மற்றும் அதற்காக நியமிக்கப்பட்ட பதவிக்குரிய வசதிகளை வழங்குவதற்காக எவ்வாறு நிதி செலவிடப்படவுள்ளது என்பது தொடர்பில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் ஊழலுக்கு எதிரான முன்னணி வினவியிருந்தது.

இந்த கடிதத்திற்கு அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் ஊழலுக்கு எதிரான முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்