முறிகள் விநியோகம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

முறிகள் விநியோகம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 4:05 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடரபில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மூன்று உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.டி.சித்ரசிறி மற்றும் பி .எஸ். ஜயவர்தன ஆகியோருடன் ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் கே. வேலுப்பிள்ளை ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த நீதிபதி கே.டி.சித்ரசிறி, உதவி சட்ட வகுப்பாளராக நீதிமன்ற சேவையில் இணைந்த அவர், 2009 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டுவரும் சித்ரசிறி, வணிக சட்டம் தொடர்பில் விசேட நிபுணத்துவம் பெற்ற ஒருவராவார்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயற்படும் பி .எஸ். ஜயவர்தன, வணிக, வங்கி, நிறுவனம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் தொழிற்துறை சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற பிரபல சட்டத்தரணியாவார்.

பல வருடங்களாக சர்வதேச வணிக வங்கியில் சேவையாற்றிய அவர் வங்கி செயற்பாடுகள் தொடர்பில் பூரண அறிவுபெற்ற ஒருவராகும்.

சிறந்த கணக்காய்வாளராக பெயர்பெற்ற கே.வேலுப்பிள்ளை, பல வருட சேவையின் பின்னர் கணக்காய்வாளர் திணைக்களத்தில் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ளார்.

அவர் ஓய்வுபெறும் போது பிரதி கணக்காய்வாளர் நாயகமாக செயற்பட்டு வந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பெயரிட்ட மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மாதங்களுக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்