உடனடித்தீர்வு வழங்கப்படாவிட்டால் உயிர்களை இழக்க நேரிடும்: ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

உடனடித்தீர்வு வழங்கப்படாவிட்டால் உயிர்களை இழக்க நேரிடும்: ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 3:53 pm

வவுனியாவில் கடந்த மூன்று நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற்போனோரது உறவினர்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

காணாமற்போனோரது உறவினர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வொன்றை வழங்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரின் பெறுமதியான உயிர்களை இழக்க நேரிடும் என்ற விடயத்தை இந்தக் கடிதம் மூலம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வொன்றை வழங்காதபட்சத்தில், வேறெந்தவொரு நடவடிக்கையும் அவர்களுக்கு திருப்தியைக் கொடுக்காது என்றும் வட மாகாண முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் உருவாக தமிழ் மக்கள் வைத்திருந்த நல்லபிப்ராயம் மற்றும் நன்மதிப்பு ஆகியன காரணமாக அமைந்தன என்பதுடன், தங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை ஜனாதிபதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பதாகவும் முதலமைச்சரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்வதற்கும் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், காணாமற்போனவர்களுக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமற்போனவர்களுக்கான அலுவலகம் தற்போது பெயரளவிலேயே இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த அலுவலகத்தினால் எவ்விதப் பயனும் மக்களுக்கு கிட்டப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்