சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் இணைவு

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் இணைவு

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 8:36 pm

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் இன்று இணைந்துகொண்டனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறப்பட வேண்டும் எனும் கோரிக்கையுடன் கடும் மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது.

வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்காலிகக்கூடாரம் அமைத்து, இரவு பகலாக தொடர்ச்சியாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமற்போனோரின் உறவினர்களால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலர் பின்னர் இணைந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், 55 முதல் 70 வரையான வயதுகளை உடையவர்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று சென்றிருந்தார்.

வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திலிருந்தும் பொதுசன தொடர்பாடல் அதிகாரியொருவர் உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், உண்ணாவிரதத்தை வலுப்படுத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இளைஞர்கள் சிலரும் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சிலர் வலுவிழந்த நிலையில், அவர்களை இன்று மாலை வைத்தியர்கள் பரிசோதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறப்பட வேண்டும், சகல அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்