சல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை இரத்து செய்யுமாறு பீட்டா, விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல்

சல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை இரத்து செய்யுமாறு பீட்டா, விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல்

சல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை இரத்து செய்யுமாறு பீட்டா, விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 7:37 pm

சல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை இரத்து செய்யுமாறு பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் என்பன உச்ச நீதிமன்றத்தில் இருவேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரு மனுக்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு சல்லிக்கட்டு தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பை விலக்கிக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசு நேற்றைய தினம் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

அதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்படுமானால் சல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தும் செல்லுபடியற்றதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாணவர் போராட்டத்தின் பின்னரான வன்முறை தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 25 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை பொலிஸார் தடுத்து வருவதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்கு விசேட சிகிச்சை குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அதனை ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் கலைந்துசென்ற போதிலும், சிலர் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

எனினும், சென்னை மெரினா கடற்கரையிலிருந்து நேற்று மாலை அனைவரும் கலைந்துசென்றதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்