ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் கொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் கொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 10:34 pm

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் 25 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று (24) கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இன்று மாலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது.

அப்பெண்ணின் தலையின் பின்புறம் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், அப்பெண் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆ.மயூரன், பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலையுண்ட பெண்ணின் கணவர் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் எனவும், அவர் பணிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சுருவில் பகுதியில் வசித்து வந்த ந.கம்சிகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 4 வயது பெண் பிள்ளைக்கு தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறையிலுள்ள வீட்டில் தனியாக இருந்தபோது இவர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நேற்று பகல் அவர் உயிரிழந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்